பொது

மார்கழி 25

10 January 2020

நமச்சிவாயம்

வாய்திறந் திங்கெமக்கோர் வாக்களிப் பாயென்றே
தாய்முகம் பார்த்துத் ததும்பிநிற்கும் – சேய்போல
ஆதிரையோய்! உன்னெதிரே அப்படியே நிற்கின்றேன்
மூதுரையோ மெளனமோ சொல்.

சொல்லொடுங்கி வீற்ற சுகரமண மாமுனிபோல்
நில்லென்றால் இந்தமனம் நிற்கவேண்டும் – நில்லாமல்
உன் கூத்தைக் கண்ணுற் றொருகூத் தடிக்கவேண்டும்
எல்லாம்தான் இங்கே இனிது

இனிதுசிவம் இன்பத் தனிமை சிவம், இம்
மனிதம் சிவனிலொரு மச்சம் – நனிநின்று
வீதியுலா வந்தருளும் வித்தகனே! உன்னிலவுச்
சோதிமுகம் கண்டால் சுகம்

சுகமும் துயரும் சுமைகளும் நீங்கி
அகத்தே எழுந்தான் அவனாய் – திகைத்தேன்
சிலிர்த்தேன் அடங்கிச் சிலைத்தேன் மனத்தேன்
கலத்தினில் உண்டேன் களி

களியுண்டாய், வெற்றிக் களிகொண்டாய், பேற்றை
அளிக்கின்ற உன்னியல்பால் ஆண்டாய் – துளிக்கவலை
தோயாமல் நெஞ்சைத் துடைத்துவிட்டாய், உன்புகழே
ஓயாமல் பாடுமென் வாய்

நாராயணம்

படுத்துக் கருங்கடலாய்ப் பாற்கடலை ஆக்கி,
அடுத்து நிலவானாய் வானில் – விடுத்த
திருவாய் மொழிக்கே இருசெவி ஈந்தாய்
திருமாலே வாழ்க நெடிது
நெடிதுயர்ந்து நின்றாய்; நிலத்தே கிடந்தாய்
படிதவழ்ந்தாய் பாலகனாய்; பாவை – படித்த
திருப்பாவை செப்பிய நெஞ்சிலெல்லாம் ஓடி
இருப்பாய் இசைப்பாய் இணைந்து

இணைவதே யோகமென்பார்; நின்னெதிரே நின்று
வணங்கும் சுகத்தையென் னென்பார்? இணங்கி
இருப்பதே வாழ்வெனப் பேறென நித்தம்
இருக்கின்றோம் இஃதேயெம் வீடு

வீடுனது பாதம்; விழிபருகும் வேதம், நின்
நீடுதுயிற் பேரழகே நின்போதம் – பாடுபட
ஒன்றுமில்லை பாடுவதே ஓர்தொழிலாய் உன்னெதிரே
நின்றதற்கோ ஒன்றுமில்லை ஈடு

ஈடுசெய்ய வொண்ணாத பேறுன்றன் பேரருளே
ஓடுகொண்ட தேனென் றுணர்ந்துகொண்டேன் – பாடுகண்டு
வேர்த்த மனம்தான் விரித்துள்ளேன்; வேறுவிதம்
பார்க்காமல் வந்து படு!

Read 110 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.