பொது

மார்கழி 26

11 January 2020

நமச்சிவாயம் நாராயணம்

உயிர் புளகமுறும்போது உள்ளத்தே ஒருவெள்ளம்
உடல்முழுதும் பஞ்சாகி ஊடுருவும் ஒளிவெள்ளம்
உயிர்க் கூச்சுறும்போது ஒன்றுமின்றி நிற்கின்றேன்
ஊசிமுனை ஒன்றினிலே உணர்வொடுங்கக் காண்கின்றேன்
பயிர்மீது மழைபட்ட பரவசக் கணம்போலப்
பாமரனைத் தொட்ட பரமசிவா! நீவாழி!
தயிர்கடைந்து திரண்டெழும் தனிவெண்ணெய் தானெடுத்துத்
தனியுண்டு எனைக்காத்த தாமோதரா வாழி!

ஒருவன் திருக்கரத்தில் ஒருதிகிரி சுழன்றிருக்கும்
ஒருவன் திருமுகத்தில் ஒற்றைவிழி தகித்திருக்கும்
ஒருவன் திருக்கரத்தில் ஒய்யாரச் சங்கிருக்கும்
ஒருவன் திருப்பதமோ ஓயாமல் நடித்திருக்கும்
இருவர் ஒருவரென்றே இதயம் நினைத்திருக்கும்
இருமையற்ற நினைப்பினிலே இன்பமே தனித்திருக்கும்
கருவம் அழித்தநீல கண்டனே நீ வாழி
காளிங்கன் மீதாடும் கண்ணபிரானே வாழி!

உடுக்கையினால் மொழிதந்தான் ஒருகுழலால் இசைதந்தான்
ஒருசூலம் ஒருகதையும் தொழிலுக்காய் ஓரமுண்டு
படுக்கையிலே ஒருயோகம் இருக்கையிலே ஒரு ஞானம்
பாற்கடலில் ஒரு யோகம் பனிமலையில் ஒருதியாகம்
அடுத்துவரும் அடியார்க்கோ அருளொன்றே விநியோகம்
ஆர்த்துவரும் பகைவர்க்கோ அழிவொன்றே அருளாகும்
மடுத்துவரும் தமிழ்தந்த மாதேவா நீ வாழி
மனம்கரைய இசைக்கின்ற மாலவனே வாழி வாழி!

ரமணன்
11.01.2020 / சனிக்கிழமை / 7.47

Read 342 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.