பொது

காளி இருக்கின்றாள்

22 March 2020
காளி இருக்கின்றாள்
கையைக் கழுவுங்கள், நன்றாய்க்
கையைக் கழுவுங்கள்
கண்ணில் தெரியாக் கறைகள் உண்டு
களைத்துச் சோராமல், தேய்த்துக்
கையைக் கழுவுங்கள்
பையில் சேருங்கள், குப்பையைப்
பையில் சேருங்கள்
பையொழு காமல் குப்பைத் தொட்டியில்
பையைப் போடுங்கள், கொஞ்சம்
பையப் போடுங்கள்!
காறித் துப்பாதீர், தெருவில்
காறித் துப்பாதீர்
கண்டவர் நம்மை எச்சில் நாடெனக்
கண்டனம் செய்கின்றார், நம்மைக்
காறி உமிழ்கின்றார்
நீரை மறக்காதீர், அதன்
நிலையை மறவாதீர், ஒரு
நிலையி லிருந்தொரு நிலைக்குச் செல்ல
நீர்போல் துணையேது? இதை
நினைந்தால் நோயேது?
மாரி, சினம்கொண்டாள், நம்மை
மாற்ற உளம்கொண்டாள்
மானிடம் என்பதில் சுயநலம் ஒன்றே
மண்டிக் கிடப்பதனால், அதை
மாற்ற திடம்கொண்டாள்
காரியம் மிகப்பெரிது, இதில்
காவல் மிகச்சிறிது
கவனமும் பொறுப்பும் கடமையாகிடும்
கணத்தில் நோய்முறியும், அதுவரை
கடலிலும் அதுபரவும்
விதியின் சுழற்சியிலே, நாம்
வெற்றுக் காகிதமே
அதிசயம் இதை மனிதர், மறந்தே
ஆட்டம் போடுவதே!
சதியெதும் இதிலில்லை, மனிதச்
சபலத் தின்பரிசே
கதியினி நம்கையில்! அதைக்
கழுவும் முறைகளினில்!
கூட்டம் கூடாதீர், கைகள்
குலுக்கி நொறுக்காதீர், பணிவாய்க்
கும்பிட்டு நகருங்கள், எவரையும்
கூடித் தழுவாதீர்
ஆட்டம் மிகப்போட்டீர், போதும்
அடங்கும் வேளையிது
அன்பால் அனைவரையும், மனதால்
அணைக்கப் பழகுங்கள்!
அச்சம் கொள்ளாதீர், பதிலாய்
அக்கறை கொள்ளுங்கள்
மச்சம் எவர்க்கோதான், நாம்வெறும்
மனிதர் மறவாதீர்!
கச்சை கட்டுங்கள், புதிய
களத்தில் இறங்குங்கள்
காளி இருக்கின்றாள், நம்பிக்
கடமை ஆற்றுங்கள்!
ரமணன்
20.03.2020 / வெள்ளி / 9.03
Read 323 times
More in this category:

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.