கட்டுரைகள் - பொது

கவிப்பேரரசுக்கு இசைக்கவியின் கடிதம்

13 January 2018

(கவிப்பேரரசு வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம்விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம். அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு.உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!

அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.
ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.

அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.

அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்)

மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு

இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலில்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!

மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!

ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!

இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!

13.01.18 / சனிக்கிழமை / மாலை 06 மணி

Read 1375 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.