கட்டுரைகள் - பொது

சேஷன் சன்மான் 2018

17 February 2018

SEshan Sanman 2018 invitation

 

அன்புடையீர்!

வணக்கம்.

என் தந்தை, அமரர் திரு த.வே. அனந்தராமசேஷன் அவர்களின் 95 ஆவது பிறந்தநாளை ஒட்டி பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில், “சேஷன் சன்மான் 2018” விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

5.30 மணிக்கே அன்பர்கள் வரத்துவங்கினர். உள்ளே வரும்போது தேநீரும் பிஸ்கெட்டுகளும் வழங்கப்பட்டன.
எங்கள் வீட்டுக் கடைக்குட்டி புவனா விழாவை நெறிப்படுத்த; எங்களுடைய இரட்டை மகன்களில் ஒருவரான விக்ரம் என்னுடைய “மலர் முழுதாக வாசம்” பாடலை இனிமையாக இறைவணக்கப் பாடலாகப் பாட; நான் வரவேற்க; கனடாவிலிருந்து வந்திருந்து எங்களை வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்திய பேராசிரியரும் இறைக்கவிஞருமான திரு அனந்த நாராயணன் (அனந்து அண்ணா) அருமையானதொரு சிவத் துதியைப் பாட; என்னுடன் முன்பு தி ஹிண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவரும், தற்போது சிறந்த யோகா ஆசிரியருமாக விளங்குபவருமான, காலஞ்சென்ற புகழ்பெற்ற எழுத்தாளர், கவிஞர் திரு “பீஷ்மர்” நா. சீ. வரதராஜன் அவர்களின் புதல்வரான திரு வி எஸ் பிரகாஷ் சில வார்த்தைகள் பேச விருது வழங்கும் விழா களை கட்டியது.

‘எங்கள் தாத்தா’ என்னும் தலைப்பில் எங்கள் இரட்டை மகன்கள் ஆனந்தும் விக்ரமும் முறையே தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசியது அனைவரையும் கவர்ந்தது. அதுதான் அன்றைய விழாவின் தனிச்சிறப்பு என்று பல பெரியோர்கள் பாராட்டியதை நானும் அப்படியே ஆமோதித்து மகிழ்கிறேன்!

‘அமுத சுரபி’ ஆசிரியரும், அற்புதமான எழுத்தாளரும், பண்பாளருமான முனைவர் திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுடைய படியுரையை என் தமக்கை மாலதி தியாகராஜன் வாசித்தார்கள். விருதை, என் தந்தைக்கு மிகவும் நெருங்கிய திரு சந்திரசேகர் அவர்கள் வழங்கினார்கள்.

மிகச் செறிவான ஓர் ஏற்புரையை வழங்கினார் திரு திருப்பூர் கிருஷ்ணன். உண்மை, மென்மை, நகைச்சுவை, பயனுள்ள தகவல்கள் இவை கலந்த பூங்கொத்தாக அமைந்தது அவருடைய பேச்சு.

சிகாகோவிலும் இங்குமாக மாறி மாறி வசிக்கும் கவிமாமணி திரு இலந்தை சு இராமசாமி அவர்கள் அருமையான மரபுக் கவிஞர். பல நூல்களை இயற்றியவர். மகாகவி பாரதியைப் பற்றி அவர் எழுதியுள்ள வாழ்க்கை வரலாறு எங்கள் “பாரதி யார்?” நாடகத்துக்கு ஆதாரமாக அமைந்தது. அவருடைய படியுரையைச் சிறிய கவிதையாக யாத்திருந்தேன். அதை என் மனைவியார் வாசித்தார்.
விருதை என் தந்தையாருக்கு மிகவும் பிரியமான தம்பதியர் திருமதி வத்சலாவும் திரு ஏ பி கிருஷ்ணமூர்த்தி அவர்களும் வழங்கினார்கள்.

தொடர்ந்து, வானவில் பண்பாட்டு மையம் திரு க ரவி, பெங்களூரு நண்பர் திரு மஹேஷ் கிருஷ்ணன், கவிமாமணி வ.வே.சு. இவர்கள் ஏற்பாட்டின்படி. இலந்தையாரின் கவிதைப் பொழிவு நிகழ்ந்தது.

ரவியும், வ.வே.சு.வும் அருமையான கவிதை வரவேற்பை அவருக்கு வழங்கினார்கள். புலவர் திரு ராமமூர்த்தி அவர்கள் மிகச் சிறப்பான வாழ்த்துக் கவிதையை வழங்கினார்.

அடுத்த 45 நிமிடங்களுக்கு இலந்தை தனது கவிதைப் பொழிவை நிகழ்த்தினார். “இலந்தைக் கவிதைப் பெட்டகம்” என்ற தன்னுடைய கவிதை நூலையும் கொண்டுவந்திருந்தார். அச்சுப்பிழை என்றுநான் குற்றம் சாட்டினேன். ஆமாம், “இலந்தை – கவிதைப் பெட்டகம்’ என்றல்லவா இருக்கவேண்டும் என்று விளக்கினேன்!

எழுத்தாளர் திரு ரமணன், திரு ‘க்ளிக்’ ரவி. நாடகக் கலைஞர் திரு குடந்தை மாலி. கடையம் ராம்ஜி, வியாசர்பாடி திரு குருமூர்த்தி, மயிலை திரு பாலகிருஷ்ணன், அரும்பாக்கம் நண்பர்கள் திரு பிச்சாண்டி, திரு சேதுராமலிங்கம், பழம்பெரும் எழுத்தாளர் திரு சங்கரி புத்திரன் முதலியோர் வந்து சிறப்புச் செய்தார்கள்.


எங்கள் “பாரதி யார்?” நாடகக் குழுவிலிருந்து திரு ‘கிரி’ ரங்கநாதன், கட்டுரையாளர் திரு பி ஆர் ஹரன், கவிஞர் விவேக் பாரதி, தர்மா ராமன், ஸ்ரீவத்சன் ஆகியோர் வந்திருந்தனர்.

அருமையான அரங்கை நிர்வகிக்கும் இனிய நண்பர் திரு ராமகிருஷ்ணனுக்கும் (ஆர்கே) மரியாதை செய்து மகிழ்ந்தோம்.

விழாவின் நிறைவில், திரு நடராஜன் கேடரிங்கிலிருந்து தருவித்த கருவேப்பிலைப்பொடி இட்லி, வெஜிடெபிள் ஊத்தப்பம், தயிர்சாதம் இவற்றோடு விக்ரம் தருவித்திருந்த இனிப்புடன் எல்லோரும் விருந்துண்டு மகிழ்ந்தார்கள்.


விழாவை Live Webcast மூலம் பலரும் கண்டு களித்தார்கள்.


படத்தில் இருந்தபடி அப்பாவும், பக்கத்தில் இருந்தபடி என் 88 வயது அம்மாவும் பார்த்து மகிழ்ந்தார்கள்.

இது என் குருநாதர் சத்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களுடைய அன்புக் கட்டளை; என் மனைவியின் யோசனை; விருதுக்குப் பெயர்வைத்தவர் அன்பு நண்பர் திரு மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும்.


மூவருக்கும் என் அன்பும் நன்றியும் எப்போதும் உண்டு.

எங்கள் மகன் விக்ரம் எடுத்த அருமையான புகைப்படங்களை இந்தச் சுட்டியைச் சொடுக்கிக் காணலாம்:

https://photos.app.goo.gl/J5A2SGpFNliCee8f2

அன்புடன்,
ரமணன்

seshan sanman award 1

 

 

 

 

 

seshan sanman award 2

புகைப்படங்கள்:

 

 

 

Read 793 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.