கட்டுரைகள் - பொது

ஸ்ரீ பக்தராஜ் மஹராஜ்

07 July 2018

பாரத நாட்டின் அடிநாதம் ஆன்மிகம். அதன் வெளிப்பாடு பண்பாடு. அதைக் காப்பாற்றிக் கொண்டு வருவது குடும்பம் என்னும் அமைப்பு. இந்த நாட்டில், ஏழைக் குடும்பங்கள்தான் கணக்கற்றவை. எத்தனையோ படையெடுப்புகள், வரலாறு காணாத கொடுமைகள், அன்னியர்களின் ஆட்சி, அவர்கள் நம்முடைய பண்பாட்டை அகற்றி அவர்களுடைய வாழ்க்கைப்போக்கை நம் மீது மேற்கொண்ட அரக்கத்தனமான சூழ்ச்சி, சுதந்திரம் அடைந்த பிறகு டொடபறுந்த போன தலைமுறைகள், பழம்பெருமையின் மேன்மை மறந்தும், புரியாமலும் போன அவலம், பைத்தியம் பிடித்துப்போன ஊடகங்கள், நமது கலாசாரத்திற்கு எதிரிகளாகத் திரண்டிருக்கின்ற நம்மவர்கள் – இத்தனை கொடுமைகள், துயரங்கள், சவால்கள் அனைத்தையும் மீறி இன்றைக்கும் நம் பண்பாடு உயிரோடு இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இந்த ஏழை மக்களின் பக்திதான்.

நம்முடைய பண்பாட்டுக்கு வேதாந்தமோ, சித்தாந்தங்களோ, தத்துவங்களோ வேரில்லை. பக்திதான் பண்பாட்டுக்கு வேர். இது ஒரு போதும் பண்டிதர்களால் காப்பாற்றப்பட்டதில்லை. எழுதப் படிக்கத் தெரியாத இந்த ஏழைப் பாமரர்கள்தான் இதனைக் காப்பாற்றி வந்திருக்கிறார்கள். இதனை நான் என்னுடைய இமயப் பயணங்களின் போதும், கும்ப மேளாவிலும் இன்னும் பல திருத்தலங்களிலும், அறிமுகமே இல்லாத எளியவர்களின் இல்லங்களிலும் கண்ணாரக் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

இந்த ஏழை மக்கள் இவ்வளவு பண்புள்ளவர்களாகவும், இனிமையாகவும் இருப்பதற்குக் காரணம், இவர்களுக்குத் தங்கள் மதத்தைப் பற்றிய அறிவு அதிகம் இல்லை, ஆனால் மதத்தின் தத்துவம் இவர்களுக்கு இதயத் துடிப்பிலேயே இருக்கிறது என்பதால்தான். இதை என்னை இமயம் தொட்டு எத்தனையோ திருத்தலங்களுக்கு அழைத்துச் சென்ற என் குருநாதர்தான் எனக்கு உணர்த்தினார்.

எல்லா மனிதர்களைப் போலவே இவர்களும் குறைகளும், நிறைகளும் உள்ளவர்கள்தான். ஆனால் பலரிடம் இல்லாத ஓர் ஆழமான ஏக்கம் இவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் உள்ளுக்குளே பெரும் பக்தர்களுக்குச் சமானமானவர்கள். வெளியே, அறியாமையினால் அல்லற்படுபவர்கள். வேதாந்த தத்துவங்களால் மட்டுமல்ல, யாகம், முறையான பூஜை இவற்றாலும் மிரண்டு விடுவார்கள். இவர்களுக்குப் பிரத்யேகமாக ஒரு வழி வேண்டும், வழிகாட்டி வேண்டும்.

ஒரு நியாயமான தேவைதான், தெய்விகத்தை அந்தத் தேவையை நிறைவு செய்யக்கூடிய வடிவமைப்பில் ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறது. தெய்வ நிலை அடைந்தாலும், அப்படிப்பட்டவர்கள் மனிதர்கள்தான். சாதாரண மனிதர்கள் போலவே தெரிந்தாலும், அவர்கள் தெய்விகமானவர்கள்தான்.

சீரடி சாயி பாபா, அக்கல்கோட் மஹராஜ், கஜானன் மஹராஜ், சங்கர் மஹராஜ் போன்ற பல மகான்கள் அப்படிப்பட்டவர்கள்தான். அவர்கள் எல்லோரும் பாமரர்களை பக்தி மூலம் கரையேற்ற வந்தவர்கள்தான். இவர்களுடைய மூலம் ஸ்ரீ தத்தாத்ரேயர் என்பார்கள். எனவே, இவர்களுடைய வழியை தத்த சம்பிரதாயம் என்று சொல்வார்கள். விசித்திரமான நடவடிக்கைகள் உள்ளவர்களாக இருப்பார்கள். எந்த நேரம் எப்படி இருப்பார்கள் என்று ஊகிக்க முடியாமல், சித்தன் போக்கு சிவன் போக்கு என்றிருப்பார்கள். கடுமையாகப் பேசுவார்கள்; நடந்து கொள்ளவும் செய்வார்கள். சீரடி பாபா தொலைக்காட்சியில்தான் இவ்வளவு கனிவாகவும், சாதுவாகவும் தெரிகிறார்! அவருடைய சரிதையை ஊன்றிப் படித்தாலும், அவரைப் பற்றி முதன்முதலில் வெளிவந்த மராத்தித் திரைப்படத்தைப் பார்த்தாலும் இது புரியும்.

இந்த வழியில் வந்தவர்தான் ஸ்ரீ பக்தராஜ் மஹராஜ்.

1920 ஆம் ஆண்டு, மத்தியப் பிரதேசத்தில் உள்ள மானஸா என்னும் இடத்தில் பிறந்தார் திரு. தீனநாத் கஸ்ரேகர்.

இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்தான். மருந்து விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். எளிய பக்தராக தினமும் இறைவழிபாடு செய்திருந்தார். அவர் வழிபாட்டில், அவ்வப்போது சத்ய நாராயண விரதம் கடைபிடிப்பதும் ஒன்று.

ஒருநாள் அந்த விரதம் முடிந்து, பிரசாதம் உண்ணும் தறுவாயில், அங்கிருந்த சின்னஞ் சிறுமியொருத்தி, “பாபாவுக்குக் கொடுக்காமல் எப்படிச் சாப்பிடலாம்?” என்று முகத்தைக் கோணிக்கொண்டாள். சிறுமையின் வாக்கை தேவியின் ஆணையாக ஏற்று தீனாநாத், அந்த ஊரில் சாதுக்கள் தங்கியிருக்கும் சத்திரத்துக்குச் சென்றார். அங்கிருந்த பீர் பாபா என்பவரை அவர் வணங்கினார். அவர், புன்னகையுடன், “உன் பாபா நானில்லை! உன் சாயி பின்புறம் அமர்ந்திருக்கிறார். தான் சாயி இல்லை என்று உன்னைத் தள்ளிவிடுவார். கோட்டை விட்டு விடாதே! கெட்டியாகக் காலைப் பிடித்துக்கொள்.” என்றார்.

சத்திரத்தின் பின்புறம் அமர்ந்திருந்த அந்த மகானுடைய திருநாமம் ஸ்ரீ அனந்தானந்த சாயீஷ். அவரை வணங்கினார் தீனாநாத்.

“தொந்திரவு செய்யாதே போ”

இந்த உணவைத் தாங்கள் ஏற்க வேண்டும்

“நான் ஏற்கெனவே சாப்பிட்டுவிட்டேன். இதை என்னால் சாப்பிட முடியாது.”

அப்படிச் சொல்லக்கூடாது நீங்கள்தான் என் சாயி பாபா

“உனக்கென்ன பைத்தியமா? சாயி பாபா சமாதி கண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன”

இருக்கலாம். ஆனால் நீங்கள்தான் சாயி பாபா. அது மட்டும் எனக்குத் தெரியும். இன்று சத்ய நாராயண விரதம் செய்தேன். நீங்கள் அடியேன் வீட்டுக்கு எழுந்தருள வேண்டும்

“முடியாது, உன் வீட்டுக்கு நானெதற்கு வரவேண்டும்?”

நீங்கள் வந்தே ஆகவேண்டும் சாயி பிரபோ! அது உங்கள் வீடு.

“சரி சரி, ஒரு கம்பளி தருவாயா” என்று தீனாநாத்தின் வீட்டுக்கு வருகிறார் ஸ்ரீ அனந்தானந்த சாயீஷ்.

இது நடப்பதற்கு ஒரு நாள் முன்பு…

ஸ்ரீ அனந்தானந்த சாயீஷுக்கு ஒரு சீடர் இருந்தார். அவர் பெயர் ஸ்ரீ புரானந்த பாபா. அவரை உள்ளே யாரையும் அனுமதிக்காதே என்று வெளியே காவலுக்கு வைத்துவிட்டு, உள்ளே அமர்ந்துகொண்டார் ஸ்ரீ அனந்தானந்தர். கொஞ்ச நேரம் கழித்து, பேச்சுக் குரல் கேட்டது. தான் கண்ணயர்ந்து விட்டோமா? நமக்குத் தெரியாமல் யார் உள்ளே சென்றது என்று ஆர்வமும், அச்சமும் மேலிட, சன்னல் வழியே பார்க்கிறார் ஸ்ரீ புரானந்தர்.

உள்ளே, ஸ்ரீ அனந்தானந்தர் அருகில் அமர்ந்திருந்தார் ஸ்ரீ சீரடி சாயி பாபா!! பாபா சமாதி கொண்டு பல ஆண்டுகளாகியிருந்தன அப்போது! “என்னிடம் ஒருவனை அனுப்புகிறேன் என்றாயே, எங்கே அவன்?” என்று பாபா கேட்க, “நாளை” என்றாராம் ஸ்ரீ அனந்தானந்தர். அந்த “நாளை”தான் பிப்ரவரி 9.

வீட்டுக்கு வந்து அமர்ந்தவரை வீழ்ந்து வணங்கினார். “நான் உனக்காக வந்தேன் தீனு” என்ற சூட்சுமமான வாசகத்தைச் சொல்லி அவருடைய முதுகில் ஓங்கி அடித்தார் குரு.

நம்மில் பலரும் இரண்டு பிறந்த தேதிகளை வைத்திருக்கிறோம். உண்மை ஒன்று; பதிவேட்டில் ஒன்று. இதன் காரணங்கள் பெரும்பாலும் கவைக்குதவாதவை என்பதால் விட்டு விடுவோம்.

ஆன்மிகப் பாதையில் நடக்கும் ஓர் ஆர்வலனுக்கு? அவன் தேடல் தொடரும் வரை, எல்லோரையும் போல அவன் உடம்பு வெளிவந்த நாள்தான் அவனுடைய பிறந்த நாள். ஆனால், இறையருளால், அவனுடைய குரு அவன் வாழ்வில் எதிர்ப்படும் போது, உடம்பு பிறந்த நாள் தன் உரிமையை இழக்கிறது. ’சீடன் என்பவன் குருவின் உள்ளங்கையில் பிறக்கிறான்; என்பார் பெரியோர். ஆனால், அது எப்போது நிகழ்கிறது என்பது நமக்குத் தெரியாது. எனவே அதன் நாள், தேதியைக் குறிக்க முடியாது.

மகாராட்டிரத்தில் பிறந்து, மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில் வசித்த மகான் ஸ்ரீ பக்தராஜ் மஹராஜ் சங்கதி இன்னும் சுவாரசியமானது.

அவர், தன் குருவை முதன்முதலில் சந்தித்தது பிப்ரவரி 9, 1956. இனி, தனியே குருவின் உள்ளங்கையில் என்ன பிறப்பது என்று, அதையே அவர்

தன்னுடைய பிறந்த நாளாக அறிவித்து விட்டார்! அதற்குப் ‘பிரகடன தினம்’ என்று பெயர்வைத்து அவருடைய அடியார்கள் அதைக் கொண்டாடுகிறார்கள்.

ஆயினும், அவர் பிறந்த தேதி ஒன்றும் உண்டல்லவா? அது என்று? அதுதான் இன்று! ஆம், ஜூலை 7 ஆம் தேதிதான் அவர் பிறந்த நாள். அதையும் நாம் கொண்டாடுவோம்.

”ஹரி ஓம் தத் ஸத்” என்பதையே தாரக மந்திரமாகக் கொண்ட அவரைச் சுற்றி எப்போதும் பஜனைகள் ஒலித்த வண்ணமும், நல்ல உணவு வகைகள் கொழித்த வன்ணமும் இருக்கும்.

பிப்ரவரி 9, 1956ல் குரு தரிசனம். 15 ஆம் தேதி மந்திர உபதேசம். 16 ஆம் தேதி குரு, தீனநாத்துக்கு “பக்தராஜ்” என்னும் பெயரைச் சூட்டினார்.

அன்றிலிருந்து பக்தராஜ் மஹராஜ் என்றே அழைக்கப்பட்ட அந்த மகான் பிறந்த நாள் இன்று.

1957 டிசம்பர் 12 ஆம் தேதி, குரு உடலை உதிர்த்து வெளியில் கலந்துவிடுகிறார். மொத்தம் 22 மாதங்கள் குருவுக்குத் தொண்டு செய்து வாழ்ந்தார்.

தொண்டு என்றால்?

கால்விரல்களில் ஊன்றித்தான் நிற்பார். குருவின் கால்களை மட்டுமே பார்ப்பார். அவர் ஏவும் எல்லாப் பணிகளையும் செய்வார். அவர் அனுமதியில்லாமல் இயற்கை உபாதைகளைக் கூட கவனிக்க மாட்டார். ஒருமுறை, உறக்கம் கூட இல்லாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து குரு சேவையில் கழிந்தன. பக்தராஜருக்கு சிறுநீர் அடக்க முடியவில்லை. குருவிடம் சொல்லாமல் செல்வதற்கில்லை என்ற விரதம். அவரோ, அருகில் வரக்கூடப் பிடிகொடுக்கவில்லை. ஒருவழியாக யாரையோ தூதுவிட்டால், அவர் சொல்வதற்குள், “அவனை நர்மதைக்குச் சென்று ஒரு குடத்தில் நீர் எடுத்துக்கொண்டு வரச்சொல்!” என்று கட்டளை இடுகிறார் குரு! நாமாயிருந்தால் கிடைத்தது சாக்கு என்று வழியில் காரியத்தை முடித்துக்கொண்டு நதிக்குச் சென்றிருப்போம். அப்படிப்பட்டவராக இல்லையே பக்தராஜர்! இரண்டு மைல் தொலைவு நடந்து சென்று, நீரெடுத்துக் கொண்டு வந்தவரை நிறுத்தி அதட்டுகிறார் குரு:

“என் சம்மதம் இல்லாமல் வராதோ?”

வராது ஸ்வாமி

அருகே அழைத்து முதுகில் ஓங்கி அறைகிறார். அந்த அறைதான் பத்துப் பதினைந்து மணி நேரம் காலை அசைக்காமல் பஜனைகள் பாடிக்கொண்டே இருப்பதற்கான தெம்பைத் தந்தது என்று என்னிடம் பிற்பாடு கூறினார் பக்தராஜர்.

குரு சேவையில் முழு நேரத்தையும் செலவிட்டார். எஞ்சிய நேரத்தில், அருகிலிருந்த மாமரத்தடியில் அமர்ந்து ஓயாமல் கண்ணீர் விட்டபடி, மராட்டியிலும், இந்தியிலும் பஜனைப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். வியாபாரம் நொடித்துவிட்டது; வருமானம் சுருங்கிவிட்டது. அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று ஸ்ரீ அனந்தானந்தரிடம் குடும்பத்தாரும், நண்பர்களும் முறையிட்டார்கள்.

அட்டகாசமாகச் சிரித்தபடியே அவர் சொன்னார், “அவனா பைத்தியம்? உலகத்தைப் பைத்தியமாக்குவதற்காக வந்திருப்பவனல்லவா அவன்!”

அன்றிலிருந்து அவருடைய வாழ்க்கை, ஊர் ஊராகச் சென்று, பஜனைகள் பாடி, ஊராரோடு சேர்ந்து உணவு சமைத்து உண்டு, வாய்த்தவர்களுக்கு மந்திர உபதேசம் செய்து அடுத்த ஊருக்குச் செல்வது என்பதாகவே மாறிவிட்டது.

மே 19, 1993ல், விசாகப்பட்டினத்தில், செல்வந்தர் திரு பிரபாத் குமார் வீட்டுக்கு வந்திருந்தார், அன்று எங்கள் திருமண நாள். நான் மும்பையிலிருந்து விமானத்தில் வந்து சேர்ந்தேன். பக்தராஜர் அதே விமானத்தில் மும்பை கிளம்புகிறார். சந்திக்க வாய்ப்பில்லை. ஆனால், அவருடைய அருள், பிரபாத் குமாரின் செல்வாக்கு மூலம் சாத்தியமாயிற்று. ‘வருகை’ வழியில் வந்த நான் ‘புறப்பாடு’ வளாகத்தில் இருந்த அவரைச் சந்தித்து வணங்கினேன். ஏதோ விசாரிப்பவர் போல, இரண்டு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார். அன்று மாலையே மும்பையில் என் மனைவி அவரைச் சந்தித்தாள். அனுராதா சரளமாக இந்தி பேசுவதாலும், மராத்தியும் புரியும் என்பதாலும் பக்தராஜரின் சந்நிதியில் அவளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.

1994 குரு பூர்ணிமாவை பாபாஜி (நான் பக்தராஜரை அப்படித்தான் அழைப்பேன்) கோவாவில் அனுட்டித்தார். அதற்கு என்னை அழைத்துக்கொண்டு வரும்படி பிரபாத் குமாருக்கு உத்தரவிட்டார். சென்றோம். ஒரு சத்திர விடுதியில் மாடியில் ஒரு சிற்றறையில், கட்டிலில் அமர்ந்திருந்தார். நெடுக அவரைப் பார்க்க நூற்றுக் கணக்காக மக்கள் வரிசையாகக் காத்திருந்தனர். அவர் அருகே காணிக்கையாகக் கொண்டு வைத்திருந்த தின்பண்டங்களை வருபவர்களுக்குக் கொடுத்துக்கொண்டே இருந்தார். வலது கை களைத்தால் இடது கையாலும் கொடுத்தார். இடைவிடாமல் பேசினார்.

எங்களை அன்போடு வரவேற்று அமரச் செய்தார். என்னைப் பார்த்தவுடன், ‘இஸ் தர்பார் மே சாயி கே, முஸாஃபிர் ஆயா ஹை து கோன்?’ என்று பாடினார். ’சாயியின் தர்பாருக்கு வந்து சேர்ந்திருக்கும் பயணியே நீ யார்?” என்பதே அந்தப் பல்லவியின் பொருள் என்பதை எனக்காக மொழி பெயர்த்துச் சொன்னார்கள்.

தன்னுடைய வயதைக் காட்டிலும் முதியவராகவும், தன் வயதுக்கு ஒப்பாத இளைஞராகவும், மிகுந்த சுறுசுறுப்பும், தள்ளாமையும் சேர்ந்தவராகவும் ஒருசேரக் காட்சி அளித்தார். அவருக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. அவர் அருகே வயலின், தப்லா வாசிக்க இருவர் இருந்தார்கள். இவர் தேவையில்லாமலே அவர்களைத் திட்டினார். அவர்கள் கொடுத்த சுருதிக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் ஏதோ ஒரு கடூர சுருதியில் பாட்டை எடுத்து அவர்களை வைதார். எதற்கோ நல்லது செய்ய வந்த பக்தர்களைக் கெட்ட வார்த்தையில் திட்டினார். “பார்த்தாயா, எனக்கு எவ்வளவு கோபம் வருகிறது? நானொன்றும் பகவான் இல்லை. நான் சாதாரண ஆள்,” என்றார் என்னைப் பார்த்து.

ஆனால், எது எப்படி இருந்தாலும், எனக்குப் புரியாத இந்தியிலும், அறவே தெரியாத மராத்தியிலும் அவர் அவ்வப்போது இருமிக்கொண்டே சுருதியில்லாமல் பாடப்பாட என் அந்தரங்கம் ஏதோ ஒரு தாக்குதலுக்கு உள்ளானது. அவர் பாடப்பாட நான் அழுதேன். அவர், பாடும்போது இடையிடையே ஏதாவது தத்துவம் சொல்லிக் கொண்டு வருவார்.

அன்றைக்கு அவர் என்னைப் பார்த்துச் சொன்னதை இன்றைக்கும் என்னால் மறக்க முடியவில்லை:

“அழு! நிறுத்தாதே அழு! இதுவேண்டும் அதுவேண்டும் என்று ஏங்கி அழும் அழுகை. இதை இழந்தேன் அதை இழந்தேன் என்று புலம்பியழும் அழுகை. இந்த அழுகையில் வரும் கண்ணீர்த் துளிகள் ஒவ்வொன்றும் வெப்ப மயமானவை. அழு! ஒரு நாள், உன் உள்ளத்தின் அடித்தளம் பெயர்ந்து, அங்கிருந்து கங்கை எழும்! உன் கண்வழியே, குளிர்ந்த, தூய துளிகளாக விழும். அது நடக்கும் வரையில் அழு!”

நான் என்னை மறந்தேன். அவர், “காய்ச்சல் ஓடிவிட்டது” என்று ஸ்வெட்டரைக் கழற்றி எறிந்தார். என்னப் பார்த்துப் புன்னகைத்தார்; தன் குருவின் படத்தைப் பணிவுடன் பார்த்து, நெஞ்சைத் தொட்டுக்கொண்டார்; அருகிலிருந்த பழங்களையும் தின்பண்டங்களையும் ஒரு கணம் நோக்கினார்; விளக்கு வைக்கும் நேரம். “உன்னைப் பார்த்தால் எனக்கு குஷியாய் இருக்கிறது!” என்று சொல்லித் தன் வலது கரத்தால் என் தலையைக் கோதி, என் தலை மீது கைவைத்து மந்திரோபதேசம் செய்தார்.

நான் மலைத்துப் போனேன். எனக்கு, இப்படி இன்னும் வேறு சில இடங்களில் நடந்திருப்பதால் எந்த மந்திரத்தை ஜெபிக்க என்று குழம்பினேன். “எல்லாவற்றையும் கொஞ்சம் செய்து பாரேன். எது மிஞ்சுகிறதோ அது உன்னுடையது!’ என்றார்.

அவர்களுடைய அடியார்களைப் போன்ற அன்பு மயமான கூட்டத்தை நான் எங்கும் பார்த்ததே இல்லை. அவர்களுடைய விருந்தோம்பலில் எந்தவிதமான ஆடம்பரமும் கிடையாது. அது அன்பு மயமானது.

பிறகு நான் அவரை மீண்டும் விசாகப்பட்டினத்திலும், இந்தூரிலும் தரிசித்திருக்கிறேன். விசாகையில், திடீரென்று இரவு 10 மணிக்கு மேல் எங்கள் வீட்டுக்கு வந்தார். “ஒன்றுமில்லை, பக்தர்கள் வீட்டில் பகவான் இருப்பான் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. பார்க்க வந்தேன். இருக்கிறான்!” என்றார். இந்தூர் சென்று அவருடைய பக்த வாத்ஸல்ய ஆசிரமத்தில் தங்கினேன். அவருடைய பாத்ரூமை என்னைப் பயன்படுத்திக் கொள்ளச் சொன்னார். எனக்காக பூரண் போளி தயார் செய்யச் சொல்லித் தானே கரண்டி கரண்டியாய் அதட்டி நெய்யை ஊற்றினார். அவருடன் (மனைவி, அம்மாவுடன்) பத்ரி சென்றது மறக்க முடியாதது.

எல்லாவற்றையும் விரித்துச் சொல்ல சக்தியில்லை. அவர் சொன்னவற்றில் ஒருசில உடனே நினைவுக்கு வருகின்றன:

நான் கடவுளில்லை; ஆனால் கடவுளிடமிருந்து வேறுபட்டவனுமில்லை

                நான் உண்மையைப் பேசவில்லை; பொய் சொல்வதே இல்லை (பேருண்மை என்பது பேச்சில் வராதது. எனவே உண்மையைப் பேசவில்லை என்றார். ஆனால், அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்ததால், பொய்யே சொன்னதில்லை என்றார்)

நான் குருவல்ல. குருவுக்காக சீடர்களைத் தயார் செய்பவன்

உங்களால் அவனைப் பார்க்க முடியாது. அவனை, உங்களைப் பார்க்க விடுங்கள். எப்படியோ, அவனைப் பொருட்படுத்தாமல் இருந்துவிடாதீர்கள்

முதலில், பார்க்கப் படுகிறீர்கள்; பிறகு காயப் படுகிறீர்கள்; அப்புறம் கொல்லப் படுகிறீர்கள்!!

நாமமே கதி

குரு மரிப்பதில்லை; உண்மையான சீடன் புலம்புவதில்லை

குருபக்தி என்பதை நான் அவரிடம்தான் தெரிந்துகொண்டேன். குரு என்பவர் எவ்வளவு உயர்ந்தவர், முக்கியமானவர், முதன்மையானவர் என்பதையெல்லாம் நான் அவருடைய குருபக்தி மூலம் புரிந்துகொண்டேன்.

என் குருவாகிய சத்குரு ஸ்ரீ சிவானந்த மூர்த்தி அவர்களை நான் அடைவதற்கு முன், என்னை பாபாஜி தயார் செய்தார் என்றே சொல்லவேண்டும். இருவரும் பீமுனிப் பட்டினத்தில் சந்தித்ததும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு.

பாபாஜியுடன் இருந்தவர் ராம்ஜி தாதா. அவர்தான் இவரை குருவிடம் அழைத்துச் சென்றார். அனந்தானந்தரோ, எனக்குப் பிறகு இவர்தான் உனக்கு குரு என்று சொல்லிச் சென்றார். ராமானந்த மஹராஜ் என்று கொண்டாடப்படும் ராம்ஜி தாதாவை நான் காகாஜி என்றே அழைப்பேன். “யார்வேண்டுமானாலும் பக்தராஜ் ஆகிவிடலாம். ஆனால், ஒருவராலும் ராம்ஜியாக முடியாது,” என்றார் பாபாஜி.

பாபாஜி உடலெடுத்து வந்த இந்தத் திருநாளில் அவரையும், காகாஜியையும், அடியார்கள் ஒவ்வொருவரையும், நாங்கள் அன்புடனும், நன்றியுடனும் வணங்கி நெகிழ்கிறோம்.

ஹரி ஓம் தத் ஸத்!

Read 298 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.