Print this page

மண்ணடியில் சுவாமி விவேகானந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாத் தொகுப்பு

11 January 2020

இன்று (ஜனவரி 10, 2020) எனக்கு ஓர் இனிய நாளாக அமைந்தது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம், மண்ணடியில் சுவாமி விவேகானந்தர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. கூலித் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றோரின் குழந்தைகளே இங்கு படிக்கிறார்கள். அம்மாக்களில் முக்கால்வாசிப்பேர், வீடுகளில் வேலை செய்பவர்கள். வாழ்வின் கடைநிலையில் இருக்குமிந்தக் குழந்தைகளைச் சந்தித்துப் பேசுவதில் பெருமை கொள்கிறேன் நான்.

மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ சந்தோஷ் மஹராஜ், பக்தரான திரு. ரவி, இவர்களுடன் ஏற்கெனவே ஒரு முறை நான் இந்தக் குழந்தைகளுக்காகப் பேசியிருக்கிறேன், பாடியிருக்கிறேன்.

இன்று, வரவிருக்கும் பொங்கல், விவேகானந்தர் பிறந்தநாள் இவற்றை முன்னிட்டு என்னை அழைத்திருந்தார்கள். வழக்கம்போல் காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் மடத்திற்குச் சென்றேன். எப்போதும் போல் இனிய முகத்துடன் வரவேற்ற ரவி, என்னை மிகமிக இனிப்பான தேநீர் அருந்த அழைத்துச் சென்றார். மஹராஜ் வந்தவுடன் கிளம்பினோம். வழிமுழுக்க சத்சங்கம்.

பள்ளி வாசலில், ஒரு புறம் கோலமிட்டுக் கரும்பு நட்டு, இடையில் இரண்டு பொங்கல் பானைகள் கொதித்துக் கொண்டிருந்தன. மறுபுறம் பெண்களின் பேண்டு வாத்தியம். மேலே சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஆரத்தி எடுத்துவிட்டு வந்தோம். எல்லாக் குழந்தைகளும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர்.

இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து இவற்றையும், பிறகு சுவாமி விவேகானந்தர் மீதான சில தமிழ்ப்பாடல்களையும் குழந்தைகள் பாடினார்கள். இனிமையாக, சுருதி சுத்தமாக அவர்கள் பாடியது வியப்பாக இருந்தது. ஒயிலாட்டம் போன்ற ஒரு நடனமும் அழகாக இருந்தது. ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

கொஞ்சம் பேசிக் கொஞ்சம் பாடினேன். முடிவில், எங்கள் “பாரதி யார்?” நாடகம் பார்த்த சில குழந்தைகளில் ஒரு பெண்ணையும், ஓர் ஆசிரியரையும் வந்து பேசச் சொன்னேன்.

அந்தக் குழந்தையின் பாராட்டு, பல பெரியோர்களின் சன்மானத்தைத் தூக்கி எறிந்துவிட்டது. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கும் இந்த இதயங்களை, பாரதி எப்படித் தொட்டிருக்கிறான் என்பதை உணர மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது. பிறகு, அந்த ஆசிரியர்களும், மாணவிகளும் என்னிடம் தனியே வந்து பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

பல குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கியும், பொங்கலை விநியோகித்தும் மகிழ்ந்தேன்.

கார் டயர் பங்க்சர் ஆகிவிட்டது. சுவாமிஜியும் நானும் ஆட்டோவில் கிளம்பினோம். இதுவரை நான் சந்தித்தறியாத போக்குவரத்து நெரிசலின் சிரமம், அவருடன் என் குருநாதரைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சி காணாமல் போக்கிவிட்டது. நாங்கள் மடத்திற்குத் திரும்ப எத்தனை தாமதமானதென்றால், நாங்கள் வந்து சேர்ந்து ஒரு சில நிமிடங்களுக்குள்ளே ரவி வந்துவிட்டார்!

சாரதாம்மாவின் மேற்பார்வையில், சத்தான, சுவையான பிரசாத உணவை உண்டு, வெளியே வந்தால் உள்ளே வந்துகொண்டிருந்தார் சுவாமி விமுர்த்தானந்தர். எனக்கு அவர் இனிய நண்பர். அவர் எனக்கொரு நற்பணியை இட்டிருக்கிறார். நான் அதைத் துவங்குவதற்குள் அவரைச் சந்திக்கவேண்டும் என்று ஆவலாய் இருந்தேன். அவரே வந்துவிட்டதை நல்ல சமிக்ஞையாகப் புரிந்துகொண்டேன்.

அந்தக் குழந்தைகளைச் சென்று பாருங்கள். அவர்கள்தான் தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு, மனிதர்களால் கைவிடப்பட்டவர்கள். . ‘பூக்களாக இருக்காதீர்கள், உதிர்ந்து போவீர்கள். செடிகளாக இருங்கள், பூத்துக்கொண்டே இருப்பீர்கள்,’ என்னும் அன்னையின் வாசகம் அங்கே கண்ணில் தென்பட்டது.

அவர்கள் பூத்துக் குலுங்கும் தெய்வீகக் கொடிகளாகக் காட்சி தந்தார்கள்.

அவர்களில் பலர், வாழ்வில் நல்ல நிலைக்கு உயர்ந்து சாதனை புரிவார்கள்.

இவர்களை உயர்த்தப் பாடுபடும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன், நம் மரியாதைக்கும், நன்றிக்கும் எப்போதும் உரியது.

  1    2 
    
  3             4 
    
5 6 
    
7 8 
    
9 10 
    
11 12 
    

 

Read 408 times