பயணப் பதிவுகள் 03 Featured

08 June 2019

வானமெனும் கூரையின் கீழ்
வையமொரே குடும்பம்தான்
வையமெனும் குடும்பத்தில்
மனிதரெல்லாம் ஒரேதரம்தான்
மோனமிகு கடல்நடுவே
முகிழ்த்தெழுந்த நிலமெல்லாம்
நாடுகளா? இல்லையில்லை
வீடுகளின் அறைகள்தான்!


நிலம்பிரிந்தால், நினைப்புள்ள
நெஞ்செல்லாம் பிரிவதுவோ?
நிமிடத்து வாழ்க்கையிலே
நீ வேறு நான் வேறோ?
புலம்பெயர்ந்து சென்றவர்கள்
புதியகதை எழுதுகிறார்
பூமியொரே வீடென்று
புதியகீதம் பாடுகின்றார்!

சிங்கப்பூரிலிருந்து சிட்னிக்குப் பறந்துகொண்டிருக்கும் போது, இப்படித்தான் தோன்றியது எனக்கு. ஒரு நிலப் பரப்பு, நிலவியல் காரணங்களால் பல கூறுகளாகப் பிரிந்துவிட்டதில், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன!

முதலில், நேரம் மாறிவிட்டது. தட்பவெப்ப நிலை, தாவரங்கள், புவி இயல், மற்ற உயிரினங்கள், பருவ நிலை இவையெல்லாம் நாட்டுக்கு நாடு மாறிவிட்டன. ஆனால், மாறாத சிலவற்றை நாம் மனமார உணர்ந்தால், எந்த நாடும், நம் வீட்டின் இன்னோர் அறைதான் என்பது புரியும்.

இங்கொரு நேரம் அங்கொரு நேரம் என்றாலும், எங்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தானே? இங்கு கோடை அங்கே வாடை என்றாலும், எங்கும் பருவங்கள் உண்டுதானே? பனிக்கட்டியாய்க் கிடக்கின்ற துருவத்திலும் பருவ மாற்றம் உண்டே! உணவு? அது உள்ளூரிலேயே மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறாக இருக்கிறது. இருப்பினும், எந்த ஊரிலும் உணவு உணவுதானே! மாற்றங்கள்தானே உணவை இன்னும் ருசியாக்குகிறது! மொழிகள் வெவ்வேறானாலும் எண்ணங்கள் ஒன்றுதானே!

நிறம் மாறுபட்டாலும், உயிர் ஒன்றுதானே!

வானமென்னும் வீதியிலே அசைவு தெரியாமல் நான் பயணித்துக் கொண்டிருந்தபோது இப்படிப்பட்ட எண்ணங்களே என் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்தன. கூடவே, காலம் என்பதைப் பகுக்கும் முயற்சியாக நாம் கைக்கடிகாரத்தைக் கட்டிக்கொண்டு, நேரம் பார்க்கிறோம் என்பதை நினைக்கும்போது சிரிப்பு வந்தது. மேலும், வெளிநாடுகளில் நேரத்தைக் கூட்டியோ குறைத்தோ திருத்துவார்கள்! நகைக்க வைக்கும் விந்தை! மேகங்களுக்கு மேலே நான் பறந்துகொண்டிருக்கிறேன். அங்கே என்ன நேரமோ? எந்த நிலப்பரப்பின் மீது பறக்கிறேனோ அந்த நேரம்தானோ? ஆனால் அந்த நிலத்தின் தட்பவெப்பம் இங்கே வானத்தில் செல்லாது. வானத்தில் உயர உயர வெப்பம் குறைந்துகொண்டே போகிறது. சன்னல் வழியாகப் பகல் தெரிந்தாலும், வானிலை என்னமோ பயங்கர மைனஸ்தான்! எத்தனை சூரியனார்கள் ஒளி பெய்தாலும் அண்டத்தின் நிறம் கருப்புதான் என்பது போல!

ஆஸ்திரேலியா ஒரு கண்டம்; ஒரே நாடு. மக்கட் தொகை மிகவும் குறைவாயுள்ள மிகப் பெரிய நிலப்பரப்பு. எங்கும் போல் இங்கும் வெள்ளைக்காரர்கள் உள்ளே புகுந்து இந்த நிலத்துக்குரிய பழங்குடியினருடைய வாழ்வை அறவே சிதைத்து, இதைத் தமதாக்கிக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கைதிகளை வைத்திருந்த இடம். அதனால்தான் இயான் போதம் (இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர்) ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது, “ஆஹா! ஒரு லட்சம் கைதிகள் முன்பு விளையாடுவது குறித்து நான் ஆவலாய் இருக்கிறேன்!!” என்று பேட்டி கொடுத்ததை ஆஸ்திரேலியர்கள் இன்றும் மறக்கவில்லை.

பாரதப் போர் காலத்தில், இங்கே ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்தன, எனவே இது ‘அஸ்திராலயா’ என்று சிலர் கூறுவதையும் கேட்டிருக்கிறேன். இப்போதிருக்கும் இலங்கை, பழைய பரந்த இலங்கையின் வடக்கு முனை. இது ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிந்திருக்கலாம்; ஆஸ்திரேலியாவில் அகழ்வாராய்ச்சி செய்தால், இராவணன் காலத்திய சிவலிங்கங்கள் கிடைக்கலாம் என்றெல்லாம் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எது எப்படியோ, ஆஸ்திரேலியாவுக்கு நான் முதன்முறையாகச் சென்றுகொண்டிருந்தேன். பழங்கதையால் பயனில்லை.

என் உடல்நிலை தேறி வருவதை உணர்ந்தேன். சென்னை நண்பர் முரளி கடைசி நிமிடத்தில் கொடுத்த மாத்திரைகளால் சளிக்கட்டு, தொண்டைக்கட்டு இவை நீங்கின.

சிட்னி வந்து சேர்ந்தபோது, காலை நேரம். எல்லாம் முடிந்து வெளியே வந்தால், என்னை அழைத்துச் செல்வதற்காக வரவேண்டியவர் வரவில்லை. அங்கே நம் கைப்பேசி வேலை செய்யவில்லை; வாட்ஸாப் இணைப்பும் இல்லை. ஆனால், விமான நிலையத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இன்முகத்துடன் எனக்கு உதவி, அவருடைய கைப்பேசியிலிருந்து நம்மாளைத் தொடர்புகொண்டேன்.

அவர் வரும் வரை காத்திருந்ததில், அந்தக் காலைக் குளிரை ரசித்துக்கொண்டிருந்தேன். பச்சை விழுந்து சாலையைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். பச்சை விழுவதற்காக, கம்பத்தில் இருக்கும் ஒரு பொத்தானைத் தட்டுகிறார்கள். சிவப்பு மாறிப் பச்சை விழும்போது, சிவபெருமானின் உடுக்கொலி போல் சத்தம் கேட்கிறது! மைனாக்கள் நம்மூர் மைனாக்களைப் போலவே இருந்தன. நாடு மாறுவதால், பறவைகளின் மொழி மாறாது என்றே கருதுகிறேன். எனக்கு மைனாவின் பாஷை ஓரளவு தெரியும். ஆபத்து வரும்போது ஒருவிதமான எச்சரிக்கை ஒலி, சினம் வரும்போது உடம்பை உப்பிக்கோண்டு ஒரு முறைப்புடன் அது செய்யும் ஒலி, உணவைக் கண்டபோது எழுப்பும் ஒலி என்று பல வேறுபாடுகளைக் காட்டும் சுவாரசியமான பறவை மைனா.

சிகரெட்டு நெடி தாங்கவில்லை. அந்த ஊரில், அந்தக் குளிரிலும், பெண்கள் கடுமையான துணிப்பஞ்சத்தில் தவித்ததை ஆண்மக்கள் கவனித்ததாகவே தெரியவில்லை. அப்பட்டம் கண்ணுக்கு வெளிப்படையாக இருந்து, மனதுக்கு மறைப்பாகி விடுகிறதா? உணர்வினால் பார்க்கத் தோன்றுகிறதா, இல்லை, பார்ப்பதால் உணர்வு வருகிறதா? தெரியவில்லை; காத்துக்கொண்டு நின்றிருந்தால் எல்லாம் கண்ணில் படுகிறது என்பது மட்டும் புரிந்தது!

பரபரப்பாக வந்து சேர்ந்தார் முத்து சர்மா என்கின்ற சந்த்ரு; என் சகலையின் தம்பி. எதிர்பாராத போக்குவரத்து நெரிசலால், அவர் போட்டு வைத்திருந்த நேரக் கணக்கு தப்பாகிப் போய், தாமதத்திற்கு வருத்தப்பட்டார். எப்படியோ, என்னால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்ததால் படபடப்பில்லாமல் காத்திருக்க முடிந்தது. வெளிநாடு செல்பவர்கள், அதுவும் என்னைப் போல் வயசாளிகள், அதிலும் முதன்முறையாக ஒரு நாட்டுக்குச் செல்பவர்கள், இதில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காரில் பயணம். மூச்சு விடாமல் சந்த்ரு பேசிக்கொண்டே வந்ததில் – இடையிடையே ‘ரொம்பப் பேசறேனோ?” என்று கேட்டு, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை’ என்று நான் சொல்வதற்குள்ளாகவே மீண்டும் படபடவென்று தொடர்வார் – இந்தப் பரந்த நாட்டைப் பற்றிச் சுருக்கமாகப் பல விவரங்கள் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இடையிடையே வீட்டுக்குச் செல்லும் வழி குறித்து அவர் யோசித்ததும், சரியான பாலத்தில்தான் ஏறினோமா என்று என்னையே கேட்டதும், எனக்கு என் பக்கத்தில் நானே உட்கார்ந்து வருவதுபோல் பீதியைக் கிளப்பியது. நான்தான் என் வீட்டிலேயே தொலைந்து போகக் கூடியவன் என்று பெயரெடுத்தவனாயிற்றே! ஒரு புயலோடு ஒருமணி நேரம் பயணம் செய்தேன்.

அமைதியான இடத்தில் அமைந்திருந்தது அவர் வீடு. அதை, அமைதியின் வடிவாகவே இருக்கும் அவர் மனைவி கலா செவ்வனே நிர்வகித்து வருகிறார். அவருடைய சமையலின் புகழ், என் மைத்துனி ரேணு (எ) சுபஸ்ரீ மூலம் என்னை ஏற்கெனவே எட்டியிருந்தது. அது மிகையே இல்லை என்பது உடனேயே எனக்குத் தெரிந்தது. ஆஹா, அந்த ரவா தோசையும், காபியும்! ராமன் மாமா சொல்வது போல் சொன்னால், அதற்கே நியூசிலாந்தை எழுதிக் கொடுத்துவிடலாம்!

சந்த்ருவின் பரபரப்பும், கலாவின் அமைதியும் – ஓ இந்தப் பிணைப்பு எனக்கு மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. இறைவன் என்பவன்தான் எத்தனை நகைச்சுவையும், குறும்பும் உள்ளவன்!!

இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள். நான் தூங்கி எழுந்து, பிறகு குளித்துவிட்டு, கலா சமைத்து வைத்திருந்த அருமையான சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தேன். ஆ! அந்தப் பாயசம் அமர்க்களம்!

சந்த்ரு – கலாவின் வீட்டைச் சுற்றி வந்தேன். கொஞ்சம் இங்கும் அங்கும் நடந்து மகிழ்ந்தேன். எந்த ஊரிலும் வானமும், மரங்களும், செடிகளும், மலர்களும் அழகுதான். எந்த ஊரிலும், புல்லழகு, மழலையர் சொல்லழகு, பறவைகள் அழகு, அவற்றின் இசையோ அழகோ அழகு! அரவிந்திடமிருந்து கடன் வாங்கிக்கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த காமெராவால் விலைபேசவே முடியாத இயற்கையின் அழகுகளைக் கொஞ்சம் படமெடுத்தேன்.

ஆஸ்திரேலிய மண்ணில் என் முதல் நிகழ்ச்சி, மார்ச் 1 ஆம் தேதி, சந்த்ருவின் வீட்டில் காஞ்சி மாமுனியைப் பற்றிய சத்சங்கம். சுமார் 20 பேர் வந்திருந்தனர். கலாவின் அருமையான உணவுடன் சிறப்பாக நடந்தது. சந்த்ரு, கடுமையான உழைப்பாளி. இந்த நிகழ்ச்சிக்காக அவர் நிறைய வேலை செய்யவேண்டி வந்தது.

சந்த்ருவுடன் ஊர்சுற்றிப் பார்ப்பது இனிமையான அனுபவம். எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகத் திட்டமிட்டு, ஒரு சின்ன விவரம் கூட விட்டு விடாமல் தெரிவித்து விடுவார். நாம் தொலைந்து போக வாய்ப்பே இருக்காது! அது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை என் மனைவியிடம் கேளுங்கள், கதை கதையாய்ச் சொல்வாள்!

சிட்னியில், சற்றுத் தள்ளி இருக்கும் சிவா விஷ்ணு திருக்கோயிலுக்கு சந்த்ருவும் கலாவும் என்னை அழைத்துச் சென்றார்கள். அது, என் தந்தையார் குடமுழுக்கு செய்துவைத்த கோயில்! அங்கே அப்பாவின் சீடராக வெகு காலம் நங்கைநல்லூர் உத்தர குருவாயூரப்பான் கோயிலில் பணிபுரிந்த விசு எனப்படும் விஸ்வேஸ்வரன் பூஜகராக இருக்கிறார். அவரைச் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என் அப்பாவை நன்றாய் அறிந்த ‘நாட் ஐயர்’ எனப்படும் திரு நடராஜன் அவர்களையும் சந்தித்தேன். அவர், மிகவும் மகிழ்ந்து, ஒலிபெருக்கியில் என்னை, உற்சவத்தை முன்னிட்டு அங்கே குழுமியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்து, அவர்களுடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக என்னைப் பாடச் சொன்னார். நான் சிவ தாண்டவம் கவிதையைச் சற்று சொல்லி, என் சிவாஷ்டகத்தைப் பாடி மகிழ்ந்தேன். எனக்குக் கோயில் சார்பில் மரியாதை செய்தார்கள். அது என் தந்தைக்கான மரியாதை என்பதை உணர்ந்து நெகிழ்ந்தேன். அங்கேதான் நான் திரு அனகன் பாபு என்னும் அருமையான மனிதரையும் சந்தித்தேன். நம் கதையில் பிற்பாடுதான் வருகிறார்.

பிற்பாடு, என் தந்தையாருக்கு மிகவும் பரிச்சயமான தம்பதியர் வந்து என்னை சந்த்ருவின் வீட்டில் சந்தித்தார்கள். அப்பாவைப் பற்றி அவர்கள் அதிசயமான தகவல்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். (அவர்களுடைய புகைப்படங்களையும் இணைத்துள்ளேன்)

சந்த்ரு – கலா வீட்டில் நான் கழித்த பொழுதுகள் எல்லாம் ரம்மியமாக இருந்தன. அவர்கள் இருவரும்தான் ஒருவர்க்கொருவர் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள்! அவர்களுடைய மணவாழ்க்கையின் அழகுக்கே இந்த வித்தியாசங்கள்தான் காரணம் என்று நான் கருதுகிறேன். கவைக்குதவாத ஒற்றுமைகளைத் தேடிக் கொண்டாடிப் பிறகு சோர்ந்து போகிறார்கள் பல தம்பதியர். வேற்றுமைகளில் இருக்கும் சுவாரசியத்தையும், நன்மையையும் அவர்கள் புரிந்துகொண்டால் இல்வாழ்க்கை அழகாகவே இருக்கும்.

அமைதியும், எப்போதும் பின்னணியில் இருந்து செயல்படுவதிலேயே நிறைவு காணும் கலாவுக்கு, சந்த்ரு எவ்வளவு காவலோ அதைவிடவும், பரபரப்பும், உழைப்பும் மிகுந்த சந்த்ருவுக்குக் கலாதான் காவல் தெய்வம். இதைக் கண்கூடாகப் பார்த்து ரசித்தேன். என் பாடலொன்று நினைவுக்கு வந்தது:

நிழலாகப் பின்னே வந்து ஒளியாக முன்னே விரிவாள்
கண்ணில் படாதிருந்தே கண்ணாகக் காவல் செய்வாள்
அவன் கோபம் தாபமெல்லாம் தாய்போலத் தாங்கிக் கொள்வாள்
அகல்போல சூழும் இருளை அழகாக வாங்கிக் கொள்வாள்
அண்டங்கள் பாடும் சக்தி சேலை கட்டி வந்த போது
அன்பென்னும் புல்லாங்குழலில் சூறைக்காற்றே தூங்கும்போது
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

 

 

Read 595 times Last modified on Friday, 10 January 2020 11:43

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.