பாடல்கள்

அந்த ஓடைக்கு எது ஆடை?

27 May 2017

Media

அந்த
ஓடைக்கு எது ஆடை? துள்ளும்
மானுக்கு என்ன பாவாடை? அந்த
வானுக்கு என்ன சேலை? வண்ணக்
கடலுக்கு உடைக்கென்ன வேலை?
இங்கு
நானுக்கு உடை தேகம், இதில்
நாணமோ வெறும் மோகம், இதில்
ஆணும் பெண்ணும் விகாரம், இதை
அறியவைக்கும் ஓங்காரம்! (அந்த)

திகம்பரன் சிவன் குழந்தை, நெஞ்சில்
தீயும் புயலும் மழலை
சுகம் துயர் எனும் சுழல் இவை இந்தச்
சுரக்குடுக்கையினால்தானே!
அகம்புறம் எதும் இல்லை, இங்கு
பகல் இரவு துளி இல்லை
அண்டம் கொண்டாட அமரர் பண்பாட
யாவுமே சிவன் நடமாடும் தில்லை (அந்த)

அந்த
ஓடைக்கு எது ஆடை? துள்ளும்
மானுக்கு என்ன பாவாடை? அந்த
வானுக்கு என்ன சேலை? வண்ணக்
கடலுக்கு உடைக்கென்ன வேலை?
இங்கு
நானுக்கு உடை தேகம், இதில்
நாணமோ வெறும் மோகம், இதில்
ஆணும் பெண்ணும் விகாரம், இதை
அறியவைக்கும் ஓங்காரம்! (அந்த)

தேகம் நானென்று நம்பி, திசை
திரியா தினியிந்தத் தும்பி
நீ நான் இது பொய்தான், இங்கு
நிஜமொன் றவனே அவனே!
உன்னில் தேகத்தைத் தேடு! இந்த
உலகை மலராய்ச் சூடு!
அன்று இன்றென்னும் ஆடைத் தடையின்றி
என்னில் நின்றாடும் எனது சிவனோடு
நினைவு கனவின்றி நின்று நடமாடு! (அந்த)


25.05.17 / வியாழன் / காலை 9.26

Read 1146 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.