பாடல்கள்

குமரிக்கு ஒரு பாட்டு

27 May 2017

Media

ஓராயிரம் வினைகளும் விதிகளும்
நூறாயிரம் கவலைகள் தடைகளும்
நீயே கதி என நின்றகணம் விலகாதோ

நேராக உனது திருப்பதம்
சோராமல் எனது கரங்களில்
பாராளும் மன்னரின் மன்னவன் நானல்லவோ!

நீராடும் கண்களில் இன்றொரு
நிம்மதி வந்தது
போராடும் நெஞ்சில் கமலம்
புன்னகை பூத்தது
யாரோடும் துளியொரு பகையில்லை
ஊரோடும் ஒருசிறு உறவில்லை
தேரோடும் திருவீதியே என்றன் எல்லை

வண்ணத் திருவடி கண்ணில் எழுந்தது
கண்ணைத் துருவியென் நெஞ்சம் தொலைந்தது
நெஞ்சைத் திருடியும் நினைவொன் றெழுந்து
தஞ்சம் தஞ்சமெனத் தவித்தது

நெஞ்சக் கமலம் நிமிர்ந்தெழுந்தது
நெருப்பி தழ்களின் நிலைமை புரிந்தது
கெஞ்சும் மனமதன் கேடழிந்தது
நானது வென்னும் கோடழிந்தது
கொஞ்சம் அதிகமெனும் வஞ்சனை இலாமல்
கொள்ளை கொள்ளையாய்க் குதூகலம்! என்
குமரி எழுந்தாள் கோலாகலம்!

இனி
மிஞ்சுவ தாரெனும் எண்ணமும் ஏது
மீள முடியாமல் கலந்த போது?
கொஞ்சும் மழலை நெஞ்சின் துளிநிழல்
வஞ்சியின் கால்களில் மலராய் விழுந்தது…

19.05.2017 / வெள்ளி / காலை 10.37

Read 1313 times

Subscribe

Contact Us

Connect with us

We're on Social Networks. Follow us & get in touch.